Saturday 13 October 2012

கிட்டிப் புள்: கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும் போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்து விட்டாலும் அவுட்!


கிரிக்கெட்டுக்கு ஆதி விளையாட்டு கிட்டிப் புள்! கிட்டி என்று அழைக்கப் படும் பாதி விறகு போன்ற சவுக்குக் கட்டை ஒரு முனையில் பாதியாகச் சீவப் பட்டு கிரிக்கெட்டில் இருக்கும் 'பேட்'டுக்குச் சமானமாய் இருக்கும். புள் என்று அழைக்கப் படும் வஸ்து,  உள்ளங்கை சைஸில்அதே சவுக்குக் கட்டை இரண்டு பக்கமும் கூராகச் சீவப்பட்டு இருக்கும்.  இதைப் பந்தாகக் கொள்ளலாம்! 
                        
ஒரு வட்டத்துக்குள் செதுக்கப் பட்டிருக்கும் சின்னஞ்சிறு நீள் குழியில் இந்தப் புள் குறுக்கு வாட்டில் வைக்கப் பட்டு, 'கீந்த'ப் படும்! கெந்தி விடுதல் கெந்துதல் என்பதுதான் கீந்துவது என்று பேச்சு வழக்காக இருந்தது. சற்று தூரத்தில் ('கீந்த'ப் படும் புள் உத்தேசமாகப் பயணம் செய்யும் தூரத்தில்) எதிர்க் கட்சி ஆட்கள் நின்றிருப்பார்கள் கீந்தப் படும் 'புள்'ளை (கையில் துண்டுடன் அல்லது கழற்றப்பட்ட அவரவர் சட்டையுடன் - விக்கெட் கீப்பர் போலத்) தயாராய் நிற்கும் எதிர் டீம் ஆட்கள் கேட்ச் செய்து விட்டால் கீந்திய ஆள் அவுட். பக்க வாட்டிலோ, தலைக்கு மேலோ வேகமாக 'கீந்த'க் கூடியவர்கள் திறமை சாலிகள். 
                     
இதில் கண்டிஷன் எல்லாம் உண்டு. திரும்பி நின்று தலைகீழாய் கால்களுக்கிடையே கீந்த பெரும்பாலும் தடை விதிக்கப் படும்! வேகம் அதிகம் இருக்கும் என்பதால். நேராக நின்றுதான் கீந்த வேண்டும்!! கேட்ச் பிடிக்கப் படாமல் கீழே விழும் 'புள்'ளை எதிர் டீம் ஆட்கள் எடுத்து, கீந்தியவன் அந்த வட்டத்தின் மேல் முனையில் வைத்திருக்கும் கிட்டியை அடிக்க வேண்டும். புள்ளால் கிட்டியில் அடித்து விட்டால் கீந்தியவர் அவுட். 
                  
இதிலும் தப்பி விட்டால் அந்தப் 'புள்' எங்கு விழுந்திருக்கிறதோ அங்கு சென்று கிட்டியால் 'புள்'ளை ஒரு முனையில் தட்டி மேலெழுப்பி அடிக்க வேண்டும். இது மாதிரி மூன்று முறை செய்யலாம். மூன்றாவது முறையும் புள்ளை மேலே எழுப்பி எவ்வளவு தூரத்தில் அடித்திருக்கிறோம் அங்கிருந்து வட்டம் வரை கிட்டியால் அளந்து கொண்டே வர வேண்டும். அது ஸ்கோர்!
                  
பதில் ஆட்டத்தில் எதிர் டீம் அந்த டார்கெட்டைத் தாண்ட வேண்டும்!
                         
கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும் போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்து விட்டாலும் அவுட்! அதே சமயம் புள்ளைக் கிட்டியால் அடித்து மேலே எழுப்பி அதை இரண்டு முறை மூன்று முறை என்று எத்தனை முறை வேண்டுமானாலும் (முடிந்தால்) தட்டி அப்புறம் அடிக்கலாம். இதற்கு(த்தான்) கில்லி என்று பெயர்! அபபடி அடிக்க அடிக்க கிட்டியால் வட்டம் வரை அளக்கும் ஒரு அளவை இரண்டு மடங்கு மூன்று மடங்கு என்று உயரும் ஏதோ ஒரு கட்டத்தில் 'புள்ளா'ல் அளக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஸ்கோர் செம எகிறு எகிற ஒரு வாய்ப்பு! 
                      
இந்த மாதிரி 'கில்லி' அடிக்கும் முயற்சிகளில் இருக்கும்போது(ம்) எதிர் டீம் கேப்டன் "ஸ்கோர் என்ன" என்று கேட்பார். (மற்ற சமயங்களிலும் கேட்கலாம். இப்போது கேட்டால் அடிப்பவரின் கவனத்தைக் குலைக்கலாமே!) யாராவது அவசரப் பட்டு தப்பாகச் சொல்லி விட்டால் போச்! அத்தோடு அந்த டீமின் ஆட்டமே காலி. எனவே ஒவ்வொரு டீமிலும் ஸ்கோர் சொல்ல என்று தனியாக ஆட்களை வைத்து விடுவார்கள், அல்லது கேப்டன் 'வேறு யாரும் சொல்லக் கூடாது. நான்தான் சொல்வேன்' என்று சொல்லி விடுவார்! 
              
ஆட்டத்தின் இந்த இடம் வாண்டுகள் கிரிக்கெட்டில் ஸ்கோர் கேட்ட இடத்தில் நினைவுக்கு வந்ததால்தான் முழு ஆட்டத்தைப் பற்றியும் நினைவுக்கு வந்து நினைவுகள் கூடவே நடந்தன! 
                         
கில்லி அடிக்கும் போது கேட்ச் பிடிக்க முயன்று எத்தனை முறை இரண்டு கை மணிக்கட்டுகளிலும் கிட்டியால் அடி வாங்கியிருக்கிறோம் என்று மணிக்கட்டுகள் வலியை நினைவு கூர்ந்தன. 
                      
கிட்டியாலும், புள்ளாலும் அடிவாங்கிய நாட்களும், தெருவில் தாண்டிச் செல்வோர் மீது பட்டு, சண்டை ஏற்பட்ட நாட்களும் நினைவில் நடை பயின்றன.

No comments:

Post a Comment